24 மே, 2017




இறந்த கால
நிஜங்களின்
நிகழ்கால
நிழல்கள்
புகைப்படம்
கரைந்து உருகும்
வாழ்க்கையின்
கணங்களை
‌சிறைபிடித்து வைத்திருக்கிறது
புகைப்படம்
காலங்கள்
கடந்தோடியதையும்
தோற்றத்தின் மாற்றங்களையும்
மனதுக்கு புரியவைக்கிறது
புகைப்படம்
உதட்டில் ஒரு புன்முறுவலையோ
மனதில் ஒரு சலசலப்பையோ
உள்ளத்தில் மகிழ்ச்சி வெள்ளத்தையோ
கண்களின் ஓரத்தில் கண்ணீர் துளியையோ
வறண்ட இதயத்தில் வேதனையின் வலியையோ
முகம் சிவக்கும் கோபங்களையோ
ஏதோ ஒன்றை பரிசளித்துவிடுகிறது
புகைப்படம்

22 மே, 2017



வெளிச்சமற்ற
ஆழ் சமுத்திரமாய் மனது
நிசப்தமாய்
பெரும் வெளி
வன்ன மீன்களாய்
நினைவுகள்...................

21 மே, 2017




ஓடுகின்ற வண்டிக்
குதிரையின் பிடரியை
உரசிச் செல்கிறது
தென்றல் ஒன்று

தென்றல் தந்த பரவசத்தில்
சற்றே சுகித்த குதிரைக்கு
விழுகிறது ஒரு சாட்டையடி

சுகத்தை மறந்து
வலியை சுமந்து
வெறி கொண்டு
ஓடத் துவங்குகிறது
குதிரை

பளு சுமக்கும் குதிரைக்கு
பயண ‌தோழர்களாய்
கிடைக்கிறார்கள் மின்மினிகள்
மின்மினிகளின் வண்ணத்தில்
வலியை மறக்க முயலுகிறது
குதிரை

ரணங்கள் கொண்ட
குதிரையின் பயணத்தில்
தென்றலின் ‌தேடல் மட்டும்
முடிவதில்லை.......

20 மே, 2017



வற்றாத சுனை ஒன்றில்
‌கசிந்து  கிடக்கிறது
அப்பழுக்கற்ற நீர்

வறண்ட நாவோடு வழிப்போக்கன்
வழியில் தெரிகிறது சுனை
பாலையாய் அவன் தாகம்
படரி விழுந்து
முகம் புதைத்தான்
சுனையுள்ளே
வறண்ட நாவில் பாய்கிறது
சுனை நீர்
தீ காட்டில் மழையாய்
வயிற்றில் இறங்கியது நீர்

இருண்ட மேகத்தில்
கசிந்த நீராய்
கண்களில் இருந்து
முட்டிய நீர் ஒன்று
சட்டென்று தெரித்து விழுந்தது
சுனை உள்ளே.......

18 மே, 2017




நீ
எனக்கு பரிசளித்த
தூக்கம் தின்ற இரவுகள்
எத்தனை வன்மம் நிறைந்தது

கடக்க முடியாத அந்த
நீண்ட இரவுகள்
உன் சாபங்களின்
வண்ணங்கள்

காட்டு குதிரைகள்
பூட்டிய உன் ரதத்தின்
சக்கரங்களாய் ஓடி
அலைகிறது  என் மனம்

கடல் விழுங்கும்
சூரியனாய் என் கண்கள்

கல்லறை தோட்ட பூக்களாய்
என் கனவுகள்

மதில் மேல்  உளாவும்
கருப்பு பூனையாய்  என் சிந்தனை


விட்டல் பூச்சியாய் நான்
என்னை கவர்ந்திழுக்கும் விளக்காய்
நீ

17 மே, 2017




என் தோட்டத்து செடிகளை
பார்த்து பார்த்து வளர்க்கிறேன்
ஆழமாய் வேர்பிடித்து வளர
அளவாய் நீர்விட்டு வளர்க்கிறேன்
காற்றும் வெளிச்சமும் கிடைக்க செய்கிறேன்
களைகளை களைவதும்
உரங்கள் இடுவதும்
ஆனந்த கடமையாய் நிறைவேற்றுகிறேன்
வாடாமல் வதங்காமல்
வளர்த்தெடுக்கும் செடிகள்
நாளை மரங்கள் ஆகும் என்பது
இந்த தோட்டக்காரனின் நம்பிக்கை
அந்த மரங்கள் நா‌ளை
நிழல்களையும்
பூக்களையும்
காய்களையும்
கனிகளையும்
வருவோர்க்கு வாரி வழங்க வேண்டும்
என்பது தோட்டக்காரன்
இறைவனிடம் வைக்கும் கோரிக்கை......

10 மே, 2017



என் இதயக்கரையின் நெருப்பலையே
நீ தழுவிய பொழுது எரிந்தவன் நான்
நீ வரைந்த தளும்புகள் வரி வரியாய்
விரிந்து கிடக்குது கரை முழுதாய்
ஆற்பரிக்கும் அலையாய் நீ
அமைதியான கரையாய் நான்
சலசலக்கும் ஓசை நீ
மௌனத்தின் பாஷை நான்
அலையே நீ ஓய்ந்தாலும்
விழும் இடம் நான்னாவேன்
அலையே நீ எழுந்தாலும்
எழும் இடம் நான்னாவேன்
விழு
எழு
கரைபவன் நான்னாவேன்.......